யாழ்ப்பாணப் பாடசாலைகளின் அவலநிலை

யாழ்ப்பாணத்துச் சித்தர் பரம்பரையில் முக்கிய மானவராகக் கருதப்படுபவர் கடையிற் சுவாமிகள். இந்தியாவில் இவர் நீதிபதியாக இருந்த போது சட்டத்திற்கிணங்க குற்றவாளி யொருவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கி விட்டாராம். இதனால் இவருடைய மனசாட்சியில் ஏற்பட்ட ஒரு வித உறுத்தல் தான் அவரது துறவு வாழ்க்கைக்குக் காரணமாம். இலங்கையின் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசரொருவர், தான் வழங்கிய ஒரு தீர்ப்பையே விமர்சனத்துடன் அணுகியிருந்தமை பத்திரிகைச் செய்திகளாக வந்துள்ளன. தற்போது இலங்கையின் நீதித்துறையின் நம்பகத் தன்மையையே சில சிரேஸ்ட அரசியல்வாதிகள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர். நீதி வழங்குபவர்கள் ‘சூழ்நிலையின் கைதிகளாக மாறாமல் நீதி தேவதையின் குரலாக இருக்க வேண்டும்’ என்பதே மக்களின் விருப்பம் என்பதையே மேற்படி சம்பவங்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக சில ஆசிரியர்களின் பிறழ்வான வகுப்பறைச் செயற்பாடுகள் பாடசாலைகளிற்கு ஒரு தலையிடியாக வந்துள்ளன. பாடசாலைகளின் செயற்பாடுகளையே தடுமாற்றத்திற்குள்ளாக்கும் அளவிற்குக் கொண்டு வந்துவிட்டன. இதனை நிவர்த்திக்க மக்களின் விழிப்புணர்வு வலுவூட்டப்பட வேண்டிய தேவை உள்ளது.

ஆசிரியர் மாணவியுடன் துர்நடத்தை, பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானார் மாணவி, என்பன தொடர்பான பத்திரிகைச் செய்திகள் வராத நாட்களே தற்பொழுது இல்லை. அந்த அளவிற்கு விழுமியங்களை மதிக்காத சமூகமாக யாழ்ப்பாணச் சமூகம் மாறிவிட்டதா? ஒரு பத்திரிகையின் பத்தியெழுத்தாளர் ஒருவரின் கூற்றில் ஒரு ஆசிரியர் 5 மாணவிகளை வன்புணர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டுப் பாடசாலையின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். உள்ளுர்த் தொலைக்காட்சி சேவையொன்று சித்திரம் ஒன்றை ஒளி பரப்பியுள்ளது. அதில் பெயர் குறிப்பிடப்படாத பாடசாலையொன்றின் சம்பவம் தொடர்பான பேட்டிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. உண்மை எது? ஊடகங்களின் ஊதிப் பெருப்பிப்பு எது? என்று புரியாது மக்கள் தடுமாறுகின்றனர். ஆசிரியப் பணியின் புனிதத்தைக் களங்கப்படுத்தும் ஆசிரியர்கள் மிகக் கடுமையான தன்டணைக்குள்ளாக்கப்படல் வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. ஆனால் சரியான தகவல் மக்களை அடைய முடியாமல் தடையாக இருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஊடக சுதந்திரம் ((media freedom) என்ற பெயரில் ஊடக வன்முறை (media violence) பரிமாணம் பெறுவதை அனுமதிப்பது நன்றன்று.

காவற்துறையின் செயற்பாட்டில் ஒரு திருப்பம் தென்படுகின்றது. இதனைத் திருப்பம் என்று கூறுவதை விடப் பாய்ச்சல் என்று கூறுவதே பொருத்தமானது. இது முன்னோக்கியதா? பின்நோக்கியதா? என்பதை வரலாறு தான் தீர்மானிக்க வேண்டும்;. குற்றத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்படுதல் புதிய நடைமுறையல்ல. வழக்கத்தில் உள்ள நடைமுறைதான். ஆனால் இவ்வளவுகாலமும் சமூகத்தால் நியாயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளைச் செய்துள்ள அதிபர், பிரதிஅதிபர், வகுப்பாசிரியர், போன்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புதிதாக இயற்றப்பட்ட சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் பாடசாலைகளின் பல மட்டங்களில் உள்ள அலுவலர்களைக் கைது செய்து பிணையின்றி விளக்க மறியலில் தொடர்ச்சியாக வைத்திருத்தல் பாடசாலைகளின் கல்வி செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சொல்ல முடியாது. இவை பற்றியும் கல்வியியலாளர்கள் ((educationist) தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

ஒரு ஆசிரியரின் துர்நடத்தை தொடர்பாக யாழ்ப்பாண புறநகர் பாடசாலை ஒன்றுக்கு முன்னால் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக செய்திகள் வந்துள்ளன. மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அங்கு முன்வைக்கப்பட்ட கோசங்களை பார்க்கும் போது மாணவர்களால் தன்னெழுச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டதாக தோன்றவில்லை. சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிரான கோசங்களை விட அதிபருக்கு எதிரான கோசங்களே மேலோங்கியுள்ளன. பிறரால் மாணவர்கள் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனர் என்று எண்ண இடமுண்டு.

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரின் குற்றம் நிருபிக்கப்பட்டால் அவர் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும் என்;ற கோரிக்கை பொருத்தமானது. நடைபெற்ற அசம்பாவிதத்தை பயன்படுத்தி அதிபருக்கு எதிரான தனிப்பட்ட குரோதத்தை தீர்க்க முயல்கின்ற கும்பல் ஒன்றின் பின்னணி இருப்பதாகவும் கருத இடமுண்டு. காயம் கண்ட இடத்தில் பிள்ளைப் பெற முயலுகின்ற இது போன்ற சக்திகளால் பல பாடசாலைகள் யாழ்ப்பாணத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சாதி, சமயம் என்பனவற்றை தம் மனதில் வைத்துச் சன்னதமாடுகின்ற இந்த சக்திகள் ஆபத்தானவைகள். உதிரியான பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் என்ற பெயரைப்பயன்படுத்தி பாடசாலை நிர்வாகத்தில் தலையீடு செய்யப்படுவதால் ஏழை மாணவர் கல்வி பல விதங்களில் பாதிப்பக்குள்ளாகியுள்ளது.பழைய மாணவர் நலன் விரும்பிகள் என்ற பெயர்களை களங்கப்படுத்தும் இவர்கள் மீது விழிப்பாக இருக்க வேண்டும். புற சக்திகளால் இவ்வார்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டால் அச்சக்திகளின் நோக்கம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த சட்ட மறுப்பு நடவடிக்கைக்கு முன்னர் சட்டத்தின் உதவியைப் பெற முயற்சித்தவர்களா? என்பது கண்டறியப்பட வேண்டும் கல்வித்திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட உள்ள ஒழுங்காற்று விசாரணையில் மேற்குறிப்பிடப்பட்ட இயலுமைகள் (possibilities) கருத்திற் கொள்ளப்பட வேண்டும். வெறும் ஆரம்ப விசாரணையுடன் கோவை மூடப்பட கூடாது. அப்படி ஒரு சில ஆசிரியர்கள், அதிபர்கள் இடமாற்றங்களுடன் கோவையை மூட முற்பட்டால் யானையைப்பார்த்த குருடர்கள் கதையாகவே நடவடிக்கை வியாக்கியானம் செய்யப்படும். கல்வி முகாமைத்துவ நடவடிக்கை எதிர்கால சமூகத்தை உருவாக்கும் கடப்பாடு உடையது. பிறழ்;வான நடத்தை உடைய ஆசிரியர்களை இனங்கண்டு மிகக்கடுமையான தண்டனைக்கு உட்படுத்த ஆற்றுப்படுத்த வேண்டும். அத்துடன் கல்வி முகாமைத்துவ நடவடிக்கையில் பொறுப்பற்ற வெளியார் தலையீடு அனுமதிக்கப்படலாகாது.

– சா.தியாகலிங்கம்
ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்,
ஆசிரியர் சங்க முன்னாள் செயற்பாட்டாளர்

Related Posts