யாழ்ப்பாணப் பல்கலையிலுள்ள மே 18 நினைவுத்தூபியை அகற்ற மீண்டும் முயற்சி!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மே 18 நினைவுத் தூபியை மீண்டும் அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு பல தரப்புகளும் பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரும், விசுவமடு மற்றும் கட்டுடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமகன்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இருவருமாக மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன.

இதன் முதல் கட்டமாக இந்தத் தூபியை அமைப்பது தொடர்பில் செலவழிக்கப்பட்ட நிதி விவரங்கள் மற்றும் பெறப்பட்ட அனுமதிகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீதான விசாரணைகள் நாளை மறுதினம் 19ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

அதேவேளை பாதுகாப்புத் தரப்பும் இதன் அடிப்படையில் அந்தத் தூபியை அகற்றுவதற்கான நகர்வுகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்தத் தூபி முறையான அனுமதிகள் எதுவுமின்றி கட்டப்பட்டதாக 2020ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடித்து அகற்றப்பட்டிருந்தது.

இதனையடுத்து எழுந்த எதிர்ப்புகள் மற்றும் அழுத்தங்களின் காரணமாக அதனை அவ்விடத்தில் அமைப்பதற்கு அப்போதைய அரச தலைமையோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகமோ எதிர்ப்பு எதனையும் தெரிவிக்காத நிலையில் அந்தத் தூபி மீண்டும் அமைக்கப்பட்டதுடன் வருடாந்தம் மே 18 நிகழ்வுகள் பல்கலைக்கழக சமூகத்தால் கடைப்பி டிக்கப்பட்டு வருகின்றது.

Related Posts