யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பட்ட மளிப்பு விழா இன்றும், நாளையும் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
கல்விச் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்ற ஒரு பெரும் விழாவாகப் பட்டமளிப்பு விழா நடைபெறுவதை கண்டு உணர முடியும்.
பட்டமளிப்பு விழா நடைபெறும் போது பல்கலைக்கழகத்தில் கற்கை நெறியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் மாணவர்கள் கப் கலெக்சன் என்ற பெயரில் தொப்பிகளை ஏந்தியவாறு பிச்சாடன மூர்த்திகளாக வலம் வருவர்.
காசு சேர்ப்பதற்காக அவர்கள் சுற்றி வளைத்து நடத்தும் தொந்தரவைப் பார்க்கும் போது பல்கலையில் இதுவும் ஒன்றோ! என்று எண்ணத் தோன்றும்.
பட்டமளிப்புப் பெற்றவர்கள் கனிஷ்ட மாணவர்களின் சுற்றி வளைப்பில் திணறியடித்து, கொண்டு வந்த காசுகளை தொப்பிக்குள் போட்டு விட்டு ஒருவாறு விடுதலை பெறுவர்.
இவ்வாறு விடுதலை பெற்றவர்களை இன்னொரு அணி சுற்றிவளைக்கும். இப்படியாக பட்டமளிப்பு நடந்து முடியும் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் முழுவதிலும் தொப்பிப் பாத்திரங்களோடு திரிகின்ற மாணவர்களைப் பார்த்து; மாணவர்களே! நீங்கள் சேர்க்கின்ற இந்தப் பணம் பதுளையில் நடந்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவா? அல்லது வன்னிப் போரில் பாதிக்கப்பட்ட குடும்ப ங்களுக்கு உதவி செய்யவா? அல்லது உங்களோடு இருக்கின்ற, நிதி வளம் குறைந்த மாணவர்களுக்கு உதவுவதற்காகவா? என்று கேட்டால் எதற்குமே இல்லை என்பது விடையாக இருக்கும்.
அப்படியானால், இது ஏன் என்றால் எங்களுக்கு முன்பிருந்தவர்கள் கடைப்பிடித்ததை நாம் கைவிட்டால் பண்பாட்டை மீறிய குற்றத்திற்கு ஆளாவோம் என்று நீங்கள் நிச்சயம் பதிலளிப்பீர்கள்.
எனவே பட்டமளிப்பு விழாவில் நடைபெறும் கப் கலெக்சன் என்ற மரபுவழிப் பண்பாட்டை நீங்கள் கை விடப்போவதில்லை.
ஆனால் நீங்கள் கப் கலெக்சனால் சேர்க்கின்ற நிதியை, வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்களின் மத்தியில் உங்களோடு இருந்து கற்கின்ற உங்கள் சக மாணவர்களுக்கு உதவுவதற்குப் பயன்படுத்தலாம் அல்லவா? அன்புக்குரிய பல்கலைக்கழக மாணவர்களே! நீங்கள் இந்த நாட்டிற்கு, எங்கள் இனத்திற்கு, எங்கள் சமூகத்திற்கு முன்மாதிரியானவர்கள்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயரில் இளைஞர்கள் ஒன்று கூடி உதவி செய்ய நினைத்தார்கள் எனில், நீங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் பெற்ற நிதி என்றவாறு உங்கள் கப் கலெக்சனை பயன்படுத்தலாம் அல்லவா? அவ்வாறு பயன்படுத்தினால் உங்களை மற்றவர்கள் வாழ்த்துவர்.
நாங்கள் தோற்ற இனம் அல்ல என்று மார்தட்டுவர். ஏகப்பட்ட நிதி உங்களிடம் வந்து சேரும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாகிய உங்களை எங்கள் பிள்ளைகளாக நினைப்பவர்கள் நாங்கள்.
நீங்கள் எத்தகைய குழப்பங்களைச் செய்தாலும் எங்கள் பிள்ளைகள் என்ற அன்பின் மிகுதியால் அவற்றைப் பொருட்படுத்தாமல், எங்களுக்குள் தாங்கிக் கொள்கின்ற பெரும் மனம் படைத்தவர்கள் தமிழ் மக்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆகையால் அன்புக்குரிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களே! 2014 ஆம் ஆண்டில் நடைபெறும் 30 ஆவது பட்டமளிப்பு விழாவில் நீங்கள் சேர்க்கும் பணம் உங்கள் பல்கலைக்கழக தோழர்களின் கஷ்டத்தைப் போக்க உதவட்டும்.
இந்தப் பேருதவிக்கு நாங்கள் நிதி கொடுத்தோம் என்று பட்டம் பெற்வர்களும் அவர்களைப் பெற்றவர்களும் பூரணதிருப்தி அடையட்டும்.
30 ஆவது பட்டமளிப்பு விழாவில் நாங்கள் சேர்த்த ……..ரூபாய் தொகைப் பணம் ஏழை மாணவர்களின் கல்விக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்ற செய்தியை உங் களிடமிருந்து ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.
நன்றி – வலம்புரி