யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களில், தமிழ் மாணவர்களுக்கு சிங்களமும், சிங்கள மாணவர்களுக்கு தமிழ்மொழியும் கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்.
தமிழ் மொழி ஒரு மாதக் கற்கையில் சித்தியடைந்த இராணுவத்தினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்சேவன விருந்தினர் விடுதியில் வெள்ளிக்கிழமை (29) இரவு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தக் கற்பித்தல் செயற்பாடுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கையிலுள்ள 15 பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மாணவர்களுக்கு சிங்களமும் சிங்கள மாணவர்களுக்கு தமிழும் கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுவருகின்றது.
ஒரு சில பல்கலைக்கழகங்கள் இதனை அறிமுகம் செய்து கற்பித்து வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதற்கான பாடவிதானத்தை தயாரிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.