யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி கல்வியைத் தொடரமுடியுமெனவும் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (வியாழக்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் அடங்கிய குழுவினரையும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்களையும் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த சிறீலங்கா அதிபர் சந்திப்பின் பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது மாணவ குழுக்கழுக்கிடையில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஆராய்ந்த சிறீலங்கா அதிபர் மோதலுக்குப் பின்னரான பல்கலைக்கழகத்தின் சூழல் குறித்தும் ஆராய்ந்தார்.
இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், இனிவரும் காலங்களில் இவ்வாறான மோதல் சம்பவங்கள் இடம்பெறாது பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அதிபர் மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் சிங்கள மாணவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் பொறுப்பேற்கும் எனவும் மாணவர்களை அச்சமின்றி கல்வியைத் தொடரமுடியும் எனவும் உறுதியளித்தார்.
இதனையடுத்து பல்கலைக்கழகம் வழமைக்குத் திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.