யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகனும் கனடாவில் கொலை!

கனடாவின் கேல்கரியில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பு சந்திரபாபு(வயது 56) மற்றும் அவரது மகன் சந்திரபாபு பிரியந்தன்(வயது 25) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கேல்கரியின் Panorama Hills பகுதியில் உள்ள வீட்டில் சனிக்கிழமை(10/6/2017) காலை 5.15 மணியளவில் இருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கேல்கரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார், சம்பவ தினத்தன்று வீட்டில் பலர் கூடியிருந்த வேளை பயங்கர விவாதம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.

விவாதம் கைகலப்பாக மாறவே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இதில் படுகாயமடைந்த இருவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் சந்தேகப்படும் குற்றவாளியாக கருதப்படும் நபர், அந்த குடும்பத்தை சார்ந்தவர் இல்லை என்ற போதிலும், குடும்ப உறுப்பினர்களுக்கு பரீட்சியமானவர் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவத்தின் போது உடனிருந்த பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இருவருடைய பிரேத பரிசோதனை நேற்று நடத்தப்பட்ட போதிலும், இறப்புக்கான காரணத்தை பொலிசார் வெளியிடவில்லை.

தம்பு சந்திரபாபு, சந்திரபாபு பிரியந்தன் ஆகிய இருவரும் டொரண்டோவில் இருந்து கேல்கரிக்கு குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts