யாழ்ப்பாணத்தி்ல் கோவிட்-19 நோயால் உயிரிழந்த முதியவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு; இறுதிச் சடங்கில் குழப்பம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உடனடியாக அன்டிஜன் பரிசோதனை செய்த போது கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறியப்பட்டுள்ளது. எனினும் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

முதியவர் அன்றைய தினமே 7ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து 9ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை முற்பகல் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் சடலம் நேற்று நண்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் நேற்று மாலை வெளியாகிய பிசிஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதனால் முதியவரின் உடலை சுகாதார முறைப்படி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளது.

இதனால் இறுதிச் சடங்கில் பதற்றமான நிலை காணப்படுகிறது.

Related Posts