யாழ்ப்பாணத்தில் 2043பேர் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பம்!

யாழ் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 43 பேர் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பத்துள்ளார்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், பொருத்துவீட்டை பெற்றுக்கொள்ளவிட்டால் கல் வீடு வழங்கப்படாது என பொதுமக்களிடம் பரப்பப்படும் கருத்துக்கள் தவறானவை எனவும் தெரிவித்துள்ளார்.

மீள் குடியேற்ற அமைச்சினால் வடக்கில் பொருத்து வீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறித்த பொருத்துவீட்டு திட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அது மக்களுக்கு உகந்ததில்லை என தெரிவித்து அத்திட்டத்தை நிறுத்துமாறு பல்வேறு பட்ட தரப்பினரிடையே எதிர்ப்புக்கள் இருந்து வரும் நிலையில் மீள் குடியேற்ற அமைச்சினால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொருத்து வீட்டுக்கான விண்ணப்பங்கள் நேரடியாக பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொருத்து வீட்டு திட்டத்தை பெற்றுக்கொள்ளா விட்டால் கல் வீட்டு திட்டம் வழங்கப்படாது எனவும் பொருத்து வீடே இனி மக்களுக்கு வழங்கப்படவுள்ளது எவும் சில அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுவதாகவும், இதனால் குழப்ப நிலையில் தாம் உள்ளதாகவும் பொதுமக்கள் சந்தேகத்தினை தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக யாழ் மாவட்ட அரச அதிபரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருத்து வீட்டை விரும்புகிறவர்கள் மாத்திரமே பொருத்து வீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. கல்வீட்டுத்திட்டம் இனி வரும் காலங்களில் வழங்கப்படாது என தெரிவிக்கும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை. கல்வீட்டுத்திட்டம் வழங்கப்படும் நேரத்தில் அவை மக்களுக்கு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts