யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக ஏழு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து வாள் மற்றும் உள்ளூர் குண்டுகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். அரியாலைப் பகுதியில் வைத்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைக் காலமாக யாழ் குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்களும் ஆயுதமுனையில் வீட்டாரை அச்சுறுத்தி பணம் நகை என்பவற்றை கொள்ளையிடும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்திருந்தன. தினமும் இரவில் அச்சத்துடனேயே தமது பொழுதுகளை மக்கள் கழிக்க வேண்டியநிலையும் ஏற்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குற்றவாளிகளை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதனடிப்படையில் யாழ்ப்பாண பொலிஸாருக்குகிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து இவ் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மூன்று வாள்களும் உள்ளூர் தயாரிப்பு கைகுண்டுகள் இரண்டும் மற்றும் கராத்தேயில் பயன்படுத்தப்படும் ஜின்யா கட்டைகள் சிலவும் மீட்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஏழு பேரும் 23 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவித்ததுடன் இவர்களிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.