யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள மேலும் மூன்று பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டில் கோரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 159ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்படுவர்களில் அரியாலையைச் சேர்ந்த 15 வயதுடைய சிறமி, 20 வயதுடைய இளைஞன் மற்றும் 36 வயதுடைய பெண் ஆகியோருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது.
சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த மதபோதகருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் என 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த மார்ச் 23ஆம் திகதி சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் 10 பேருக்கு புதன்கிழமை மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மூன்று பேருக்கு தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. மத போதகர், சுவிஸ் போதகரின் சாரதியாகக் கடமையாற்றியவர் மற்றும் பெண் ஒருவருமே இவ்வாறு கோரோனா தொற்றுக்குள்ளாகியமையால் வெலிகந்தை ஆதார வைத்தியசாலை சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் ஏனைய 10 பேரின் மாதிரிகள் நேற்று முன்தினம் ஆய்வுகூடப் பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அவர்களில் மூன்று பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு நேற்றிரவு அறிக்கை கிடைத்துள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.