எம்மிடம் உள்ள மக்கள் பலத்தினை நிரூபிக்க நாம் யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளோம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்தாலும், நாம் மக்கள் நீதிமன்றத்தில் அது பொய் என்பதை நிரூபிப்போம் என பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அண்மையில் கொண்டுவந்த திருத்தச் சட்ட மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெற்றதை வைத்து இந்த அரசாங்கம் மக்கள் பலத்துடன் உள்ளதாக கூறமுடியாது.
எமது மக்கள் சந்திப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறும். அதன் ஒரு அங்கமாகவே நாம் யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளோம் என பஷில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.