Ad Widget

யாழ்ப்பாணத்தில் நியாயம் கேட்டவர்களை துப்பாக்கியால் மிரட்டிய காவல்துறையினர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கொன்றில் பின் கதவால் ரிக்கற் விற்றவர்களிடம் நியாயம் கேட்ட சில இளைஞர்களை அங்கிருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல திரையரங்கொன்றில் புதிதாக வந்த படமொன்று காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. சனிக்கிழமை காலை திரைப்படத்தைப் பார்ப்பதற்காக நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு பலர் வரிசையில் காத்திருந்தபோது ரிக்கற் விற்பவர் பின்பக்க வாசலால் ரிக்கற்றை விற்கத் தொடங்கினார்.

இதனால் கோபமடைந்த சில இளைஞர்கள் அது தொடர்பில் ஊழியர்களுடன் வாக்குவாதப்பட்டனர். அதன் பின்னர், ஊழியர்கள் பின் கதவால் நுழைவு சீட்டு விற்பதனை நிறுத்தினர்.

இதன்பின்னர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வரிசையில் நின்று ரிக்கற்றை வாங்கி படம் பார்ப்பதற்காக உள்நுழைந்தனர்.

அப்போது, அவர்களை ஊழியர்கள் உள்நுழையவிடாது தடுத்து நிறுத்தினர். ஊழியர்கள் தடுத்ததையும் பொருட்படுத்தாது, இளைஞர்கள் திரையங்கினுள் சென்று உட்கார்ந்தனர்.

இதன்போது அங்கு சிவிலுடையில் நின்ற காவல்துறை பரிசோதகர் ஒருவர் தனது கைத்துப்பாக்கியை பின்பக்கம் செருகி விட்டு, திரையரங்கினுள் நுழைந்து ஊழியர்களுடன் வாக்குவாதப்பட்ட இளைஞர்களை திரையரங்குக்கு வெளியில் அழைத்தார்.

அங்குவைத்து இளைஞர்களை கைதுசெய்யப்போகின்றேன் என மிரட்டியதுடன், இது உங்கள் தியேட்டர் இல்லை, இங்குள்ளவர்கள் தாம் விரும்பிய படி விரும்பியவர்களுக்கு ரிக்கெட் விற்பார்கள். அதனை கேட்க உங்களுக்கு உரிமை இல்லை. உங்களை இவர்கள் வாருங்கள் என அழைத்து படம் காட்டவில்லை. விரும்பினால் வந்து பாருங்கள் இல்லை எனில் வேறு தியட்டருக்கு சென்று படம் பாருங்கள். என மிரட்டினார்.

இதற்கு திரையரங்கிலுள்ள ஏனைய மக்கள் காவல்துறை பரிசோதகரின் இன்நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

Related Posts