யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் குடியிருப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இவ்வாறு யாழ்ப்பாணம் பிராந்திய தொற்றுநோயியலாளர் மருத்துவர் எஸ்.மோகனகுமார் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பாகவும் விழிப்பாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் கோரோனா மற்றும் டெங்கு நோய்கள் தொடர்பாக அக்கறையுடன் சிந்தித்து செயற்பட்டால் மட்டுமே இந்த இரண்டு தொற்று நோய்களிலிருந்தும் வெற்றிகரமாக நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
உங்கள் வீடுகளில் உட்பகுதி மற்றும் சுற்றாடல் பகுதிகளில் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் உள்ளனவா என்பதை பரிசோதனை செய்து அப்புறப்படுத்த நடவடிக்கை நீங்களாகவே மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பரிசோதனையின் போது உங்கள் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் அடையாளப்படுத்தப்படுமேயானால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
கோரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சுகாதாரத்துறையினர் மற்றும் ஏனைய துறையினர் தொடர்ச்சியாக முயற்சித்து வரும் நிலையில் தற்போது நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக டெங்கு பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் எமது பிரதேசத்தில் கூடுதலாக காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் டெங்கு தாக்கத்தினால் எமது மக்கள் பட்ட இன்னல்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. எனவே மக்கள் கோரோனா மற்றும் டெங்கு நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார திணைக்களத்தினரால் வழங்கப்படும் நடைமுறையினை பின்பற்றி செயற்பட வேண்டும் – என்றார்.