யாழ்ப்பாணத்திலும் சந்தன மரத்தை நாட்டி வளர்க்க முடியும் என்று நவக்கிரியில் அமைந்துள்ள சுதேச மருத்துவ திணைக்களத்தின் மூலிகைத் தோட்டத்தில் மூலிகை மரங்களை நாட்டிவரும் வைத்தியர்கள் நிரூபித்துள்ளனர்.
பொதுவாக யாழ்ப்பாணத்துக்கு தட்ப வெப்பநிலைக்கு சந்தன மரம் நாட்டி வளர்ப்பது சிரமமானது என்று நம்பப்படுகிறது. எனினும், மாதுளை மரம் ஒன்றை அருகில் நாட்டி ஒன்றரை வருட சந்தன மரத்தை வளர்த்து சாதனை படைத்துள்ளனர் நவக்கிரி மூலிகைத் தோட்ட மருத்துவர்கள்.
சந்தன மரம் அதிக விலை போகும் ஒரு மர வகையாக இருப்பதால், அதனை யாழ்ப்பாணத்தில் நாட்டி வளர்ப்பதன் மூலம் பெருந்தொகை நிதி வருமானத்தைத் தேடிக்கொள்ளலாம் என்று நவக்கரி தோட்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சந்தன மரத்தை வடபகுதியில் நட்டால் வளராது, வராது என்றுதான் அனைவரும் சொல்லுவார்கள் ஆனால் அவர்கள் சொல்லுவது எல்லாம் உண்மைக்கு புறம்பானது என நிரூபித்திருக்கின்றார் வைத்திய கலாநிதி கனகசுந்தரம்.
ஒரு குருவிச்சை எப்படி நிலத்தில் உள்ள நீரை நேரடியா உறிஞ்சத் தெரியாமல் பாலை, முதிரை, மாதுளை போன்ற மரங்களில் ஒட்டிக்கொண்டு அதனுடைய சத்துக்களை உறிஞ்சி வாழ்கிறதோ அதே போல்தான் சந்தனமரமும். சந்தனமரம் செம்பாட்டு மண்ணிலிருந்து நேரடியாக தனது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை உறிஞ்சக்கூடிய தன்மையைக்கொண்டிருக்க வில்லை என குறிப்பிட்டார்.
எனவே நீங்கள் மிகவும் இலகுவாக ஒட்டுண்ணித்தாரவங்களால் உறிஞ்சக் கூடிய மாதுளம் கன்று ஒனறை சந்தன மரத்திற்கு பக்கத்தில் நட்டு விடுங்கள் பிறகு பாருங்கள் எப்படி வேகமாக வளருகிறது சந்தன மரம் என்று.
ஏன் எனில் மாதுளை மரத்தில் இருந்து இலகுவாக சந்தனமரம் தனது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை பெற்றுக்கொள்ளுவதால் மாதுளையின் வளர்ச்சி என்பது சிறிதாக இருக்கும் போது சந்தன மரத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டார்