யாழ்ப்பாணத்தில் கே.பி.

யுத்தம் முடிவடைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள போதும் யுத்தத்தால் பாதிப்படைந்த தமிழ் மக்களின் வாழ்வாதரத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் கிட்டவில்லை என குமரன் பத்மநாதன் (கே.பி.) தெரிவித்தார்.தற்போது இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ள குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.

யாழ்.வந்த அவர் குடாநாட்டின் பல இடங்களுக்கும் சென்று இடம் பெயர்ந்த மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளார். அத்துடன் பொதுமக்களை யும், மீனவர்களையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த விஜயம் தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்  தெரிவித்தவை வருமாறு;
“கடந்த ஞாயிற்றுக்கிழமை புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவுகள் சிலரையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தேன். போரினால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் வாழ்வாதாரத்தில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் கிட்டவில்லை.
எமது மக்களின் இந்த நிலையை புலம்பெயர் தமிழர்களுக்கு நேரடியாகக் காண்பிக்கவே அவர்களை அழைத்து வந்தேன். அத்துடன் என்னால் நடத்தப்படும் “நேர்டோ’ என்ற நிறுவனத்தின் கிளை ஒன்று பருத்தித்துறை இன்பருட்டியில் அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி அடிப்படை உதவிகளை வழங்கும் பணிகளை முன்னெடுப்பதற்காக அந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட வேண்டியுள்ளன. அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதே எனது விஜயத்தின் நோக்கம்.
பருத்தித்துறையில் பொதுமக்கள், மீனவர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தோம். அவசர அடிப்படை உதவிகளை அவர்களுக்கு வழங்க வேண்டிய தேவை உள்ளது. அதனை முதலில் கவனிக்க வேண்டும். எமது மக்களுக்கு ஏதாவது செய்யதாக வேண்டும் என்ற மனநிலையில் நான் செயற்பட்டுவருகிறேன். இதனை விட வேறுநோக்கங்கள் எதுவும் என்னிடம் இல்லை. புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் எமது மக்களுக்கு உதவும் திட்டங்கள் சிலவற்றை முன்னெடுக்கவுள்ளோம். என்றார் கே.பி.

Related Posts