வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் காணிகளை விடுவித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக காணிகளை அபகரித்துவருவதாக வடக்குமாகாண மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி டி.பாலமுரளி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் நடைபெற்ற உபகுழுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,
வடக்கில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்கின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்று 18 மாதங்கள் கடந்துவிட்டபோதிலும் அங்கு நல்லாட்சி நிலவவில்லை. அத்துடன் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்தே செல்கின்றது எனவும் தெரிவித்தார்.
வடக்கில் இராணுவத்தினர் விடுதிகளை நடாத்தி வருகின்றனர். பாலர் பாடசாலைகளை பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களே நடாத்தி வருகின்றனர்.
கண்டிவீதியில் குறிப்பிட்ட இடைவெளிகளில் இராணுவத்தினர் தமது உணவு விடுதிகளை நடாத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாகவும், போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும் என பல நாடுகள் தெரிவித்து வருகின்றபோதும் சிறீலங்காவின் அதிபர் மற்றும் பிரதமர் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார்கள் என தெரிவித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.