யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலைசெய்யும் ஊழியரை, கடை உரிமையாளர் தாக்கியதில் அந்த ஊழியர் செவித்திறன் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குறித்த நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை, வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, உரிமையாளர் மீண்டும் கடைக்கு வருமாறும், சிறிய வேலை மீதமிருக்கின்றது. செய்து தந்துவிட்டு செல்லுமாறும் கூறியுள்ளார். அதற்கு, பஸ்ஸில் ஏறிவிட்டேன், வேறு இளைஞர்களை கொண்டு செய்யுமாறு முதலாளிக்கு கூறிவிட்டு குறித்த இளைஞர் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின்னர் கடந்த திங்கட்கிழமை வழமை போன்று கடைக்கு வந்த இளைஞரை, கடையின் பின்பக்கமாக அழைத்துச் சென்றுவிட்டு, கம்பியினால் தாக்கியதுடன், காதைப் பொத்தி அடித்துள்ளார்.
அடியை வாங்கிக்கொண்டு இளைஞர் வீட்டிற்கு சென்றதை தொடர்ந்து, அந்த இடத்தில் நின்ற வேறு சிலர் சம்பவத்தினை அறிந்து இளைஞரை வீட்டிற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். பார்வையிட்டதுடன், இளைஞரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் சென்று முறைப்பாடு பதிவு செய்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேலை கனகராஜிடம் பிரச்சினைகளை தெரிவித்துள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யத்தவறினால், மீண்டும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்தால், அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார். இளைஞர் காது கேளாத நிலையில் இருந்ததை கண்டு, இளைஞரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறு இளைஞர்கள் கூடியதில் யாழ். பொலிஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நிலையில், இளைஞரை சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும், குறித்த இளைஞரின் முறைப்பாட்டினை யாழ். போதனா வைத்தியசாலையின் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஊடாக பெற்றுக்கொள்வதாகவும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளதுடன், நகைக்கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் இளைஞர்கள் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறிச்சென்றமையும் குறிப்பிடத்தக்கது.