இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னனின் கோரிக்கைக்கு அமைவாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடானது இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசூரியன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழர் ஆராச்சி மாநாட்டில் இவ் உலக தமிழர் பண்பாட்டு இயக்கமானது உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்ட நோக்கமானது தமிழின் மொழி பண்பாடு கலாச்சாரங்களை பேணி பாதுகாத்து அதனை உலகிற்கு எடுத்துச் செல்வதற்காகவே இவ் அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் நாட்டில் பின்னர் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலமைகளால் இவ் அமைப்பானது புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்பட்டு வந்திருந்தது.
இதன்படி உலகளவில் இதுவரை தமிழ்நாடு, ஜேர்மன், பாரிஸ், மலேசியா, சுவிற்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உட்பட பன்னிரன்டு நாடுகளில் நடாத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் கடந்த பன்னிரன்டாவது மாநாடானது இந்தியாவில் தமிழ்நாட்டில் நடாத்தப்பட்டிருந்த போது அங்கு கலந்துகொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னன் இதனை யாழ்ப்பாணத்திலும் அனைத்து தமிழர்களையும் ஒன்றினைக்கும் வகையில் நடாத்த வேண்டும் என கோரியிருந்தார்.
அதற்கமைவாக யுத்தத்திற்கு பின்னர் தற்போது இம் முறை இவ் நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளோம். இரண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இந் நிகழ்வானது எதிர்வரும் 5ஆம் 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 100 ற்கும் மேற்பட்ட புலம்பெயர் நாட்டவர்களும் இவ் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந் நிகழ்வின் சிறப்பு தலைவராக தமிழ்நாடு பாண்டிச்சேரி பல்கலைகழகத்தின் பேராசிரியர் பஞ்ச இராமலிங்கம் கலந்துகொள்ளவுள்ளார்.
இந் நிகழ்வுக்கு அனைத்து தமிழ் மக்களும் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை இவ் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இவ் மாநாட்டின் ஊடக ஒருங்கினைப்பாளர் செந்தில்வேலர் மற்றும் உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளைத் தலைவர் அருணாசலம் சத்தியானந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.