யாழ்ப்பாணத்தில் இந்தியா அமைக்கும் 3000 மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில், 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான உடன்பாட்டில், இந்தியாவும் சிறீலங்காவும் நேற்று கையெழுத்திட்டன.

சிறீலங்காவின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி முன்னிலையில், பதில் இந்தியத் தூதுவர் அரிந்தம் பக்சியும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதியும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

இந்தத் திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா இந்தியாவால் வழங்கப்பட்டுள்ளது. சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமையவே, இந்த உதவியை இந்தியா வழங்க முன்வந்துள்ளது.

இதற்கமைய யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 3000 குடும்பங்களுக்கு மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. அத்துடன் இந்த மழைநீர் சேகரிப்புத் தொட்டியின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு முறை தொடர்பாகவும் பயிற்சியளிக்கப்படும்.

இத்திட்டத்திற்காக அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்களும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இத்திட்டத்தினால் வேலைவாய்ப்பும் கிடைக்கவுள்ளதாக இந்தியத் தூதரகப் பேச்சாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Posts