யாழ்ப்பாணத்தில் அடிப்படை வசதிகளுடனான வீடுகளை அமைக்க திட்டம்

யாழ்ப்பாணத்தில் வீட்டுத் தேவையைக் கொண்டுள்ள அனைவருக்கும் அடிப்படை வசதிகளுடனான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பவுள்ளன.

உலக வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மூலோபாய வழிமுறையிலான நகரஅபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதற்பான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைவாக உத்தேச புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான வீட்டுப் பயனாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கை யாழ் மாவட்ட செயலகத்தின் செயலாளரின் வழிகாட்டலில் பிரதேச செயலாளர்கள் காணி அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் எதிர்வரும் சில தினங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்கவின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நறைபெற்றுள்ளது.இந்த பேச்சுவார்த்தையின் போது இதனை நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டம் தொடர்பில் அடிப்படைத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அபிவிருத்தி செய்யக்கூடிய நகரமொன்றாக யாழ்ப்பாண நகரம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ் நகரத்தை மிகவும் வசதிகளுடன் கூடிய நகரமாக மேம்படுத்துவதற்கு திட்டமிட்ட நடவடிக்கைக்கான முறையான திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை தற்போது தயாரித்துள்ளது.

இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது நகரம் மற்றம் அதனை அடுத்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கொண்ட வீடமைப்புக்களையும் பெற்றுக் கொடுப்பது முக்கிய சவாலாக இருப்பதாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்திக்காக பயன்படுத்தக்ககூடிய காணிகள் பல இருப்பதுடன் அவற்றில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக குடியிருக்கின்றனர். இதற்குத் தீர்வாக யாழ் நகரத்திற்கு அருகாமையில் நாவற்குழி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட 200 ஏக்கர் காணியில் அனைவருக்;கும் செவன தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் புதிய முன்மாதிரிக் கிராமமொன்றை நிர்மாணிப்பதற்கு 16 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாண நகரம் மற்றும் அதனை அடுத்துள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்காக இந்த உத்தேச மாதிரிக் கிராமத்தின் வீடமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

Related Posts