யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் கைது!!

முல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் தருமபுரம் மற்றும் புதுக்குடியிருப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் தாக்குதல் நடத்தச் சென்ற இருவர் சுதந்திரபுரத்தில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த இருவர் புதுக்குடியிருப்புப் பொலிஸாராலும் பேருந்தில் பயணித்த 10 பேர் தருமபுரம் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டனர்.

ஆனைக்கோட்டை, கூழாவடி மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.

“சுதந்திரம் பகுதியில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்து, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் கும்பல் ஒன்று வருகை தந்துள்ளது. இரவு 9 மணிக்கு அந்தக் கும்பல் தாக்குதலுக்கு முற்பட்ட வேளை, இருவரைப் பொது மக்கள் மடக்கப்பிடித்துள்ளனர்.

அதனால் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பித்தனர். பொது மக்களால் பிடிக்கப்பட்ட இருவரும் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் பலர் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டியில் தப்பித்துள்ளனர் என்று பொது மக்களால் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. பேருந்து மற்றும் முச்சக்கர வண்டியின் இலக்கங்கள் தருமபுரம் மற்றும் சிளிநொச்சிப் பொலிஸாருக்கு உடனடியாக வழங்கப்பட்டது.

அத்துடன், புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்டனர். பேருந்தை இரவு 10.30 மணியளவில் தருமபுரம் பொலிஸார் வழிமறித்து அதில் பயணித்த 10 பேரைக் கைது செய்தனர்.பேருந்துக்குள் இருந்து கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டன.

நீண்ட நாள்களாக திட்டமிடப்பட்டு இந்தத் தாக்குதலுக்கு ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் முயற்சித்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் கொலைக் குற்றச்சாட்டு வழக்கு உள்ளது. அத்துடன், கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குகளும் உள்ளன என்பது விசாரணைகளில் தெரியவந்தது.

சந்தேகநபர்கள் நால்வர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றிலும் 10 பேர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றிலும் முற்படுத்தப்படுவர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸார் தேர்தல் கடமைகளில் உள்ள வேளை இந்தத் தாக்குதலை நடத்தலாம் என்று கும்பல் திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Related Posts