யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை கலேவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் 25.253 கிராம் ஹெரோயினை கொண்டுசென்றுகொண்டிருந்தவேளை குறிப்பிட்ட நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பை சேர்ந்த 26 வயது இளைஞனையே கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் குறிப்பிட்ட இளைஞன் போதைப்பொருளிற்கு அடிமையானவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் தனது கையடக்கத்தொலைபேசியை பேருந்திற்குள் வைத்துவிட்டு நடத்துனரிடம் சண்டையிட்டார் என தெரிவித்துள்ள பொலிஸார் இதனை தொடர்ந்து பேருந்தின் சாரதி இது குறித்து கலேவல பொலிஸிற்கு முறைப்பாடு செய்ததாகவும்,அவ்வேளை சந்தேகநபர் பேருந்திலிருந்து இறங்கி தப்பியோட முயன்றவேளை கைதுசெய்யப்பட்டார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது கொழும்பிலிருந்து இயங்கும் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்துவதற்கு தன்னை பயன்படுத்தியதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

பொருட்களை கொண்டு செல்வது போன்று யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு செல்வது வழமை என சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் குறிப்பிட்ட குழுவை சேர்ந்தவர்கள் தனக்கு போதைப்பொருட்களை வழங்குவார்கள் எனவும் தெரிவித்துள்ள சந்தேகநபர் பின்னர் தனக்கு பணம் வழங்கி யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருளை கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் உள்ள நபர் ஒருவரிடம் தான் நாளாந்தம் பொருட்களை வழங்குவது வழமை என தெரிவித்துள்ள நபர் யாழ்ப்பாணத்திற்கு சென்றவுடன் தனக்கு மேலும் போதைப்பொருள் வழங்கப்படுவதாகவும் அதன் பின்னர் தான் பேருந்தில் ஏறி கொழும்பு வருவது வழமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபர் இவ்வாறான நடவடிக்கையில் நீண்ட காலம் ஈடுபட்டு வந்தமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts