யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இறப்புகளும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கவலை வெளியிட்டுள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“பொதுமக்களும் சமூக பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டிய காலமாக இது காணப்படுகின்றது.
மேலும் வைத்தியசாலைகளில் கூட இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே இத்தகைய சூழ்நிலையினை அனைவரும் உணர்ந்து, தமது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக புதிய வழிகாட்டலின் படி வழிபாட்டிடங்களில் ஒன்று கூடுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய குடும்ப நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் ஆகியவற்றைக்கூட மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கட்டுப்பாட்டுடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே புதிய சுகாதார நடைமுறையினை மக்கள் இறுக்கமாக பின்பற்றுவதுடன் அநாவசியமாக வீடுகளிலிருந்து வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.