யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதான கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு எதிரிகளையும் யாழ் மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னிலையாகுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும்இ யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறுகின்ற கிரிக்கட் போட்டியின்போது மைதானத்தில் வைத்து ஜயரட்னம் தனுஷன் அமலன் ரசிகர்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ் வெண்டில்கரன், நேசரட்னம் கஜேந்திரன், நாகராஜா காந்தரூபன், சுந்தரலிங்கம் பிரகாஷ் ஆகிய 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொலைக் குற்றம் சுமத்தி, யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முதற் தடவையாக நேற்று செவ்வாய்க்கிழமை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்தன் எதிரிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அவர்களுக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி சந்தேக நபர்கள் 6 பேரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, நீதிமன்றத்தினால் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் 12 தடயப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.