யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்று வரும் அதிகார துஷ்பிரயோகங்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும், தர்மகர்த்தா சபையினரால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த கோரியும் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கல்லூரி பழைய மாணவர்களின் பிரித்தானிய கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி Northolt Village Community Centre, Ealing Road, Northolt UB5 6AD பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டம் தொடர்பில் கல்லூரி பழைய மாணவர்களின் பிரித்தானிய கிளையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘இலங்கையில் 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கல்விக் கூடங்களில் யாழ்ப்பாணக் கல்லூரியும் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. அது மாத்திரமன்றி, யாழ்ப்பாணத்தில் நீண்டகால பாரம்பரியத்துடன் இயங்கிவரும் இரண்டு முற்று முழுதான தனியார் பாடசாலைகளில் யாழ்ப்பாணக் கல்லூரி ஒன்று.

இவ்வாறான சிறப்புக்களை கொண்ட கல்லூரி, கடந்த சில வருடங்களாக ஒரு வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கான காரணம் தற்போதைய தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண பேராயரும் அவரின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் யாழ்ப்பாணக்கல்லூரியின் நிர்வாகக் குழுவும் என்பது பலரின் அபிப்பிராயம்.

அமெரிக்காவிலுள்ள யாழ்ப்பாணக்கல்லூரியின் நிதி அறங்காவலர்கள் (Trustee of Jaffna College Funds in the USA) மேற்கூறிய நிலையை மாற்றுவதற்காக, யாழ்பாண கல்லூரியின் இயக்குநர் சபையிலும், யாழ்ப்பாண கல்லூரியிலும் ஒரு மாற்றத்துடன் கூடிய சீர்திருத்தத்தை கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.

இதற்கு இசைய மறுக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் இருந்துவரும் நிதியுதவி 2019 ஆம் ஆண்டிலிருந்து முழுமையாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள். இவ்வாறான நிலையிலும் தற்போது நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் எதற்கும் உடன்பட மறுப்பது மிகவும் கவலைக்கிடமானது.

யாழ்ப்பாணக்கல்லூரியின் வட்டுக்கோட்டை மற்றும் கொழும்பு பழைய மாணவர் சங்கங்கள் கல்லூரியின் தற்போதைய கவலைக்கிடமான நிலையை உலகிற்கு வெளிப்படுத்தவும், மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் கோரி நிற்கும் அமெரிக்காவிலுள்ள அறங்காவலர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலும் கவனயீர்ப்பு ஆர்பாட்டங்களை நடாத்தியுள்ளார்கள்.

இந்தநிலையில் யாழ்ப்பாணக் கல்லூரியின் பிரித்தானியாவில் வாழும் பழைய மாணவர்களாகிய நாம் யாழ்ப்பாணக் கல்லூரியின் நலன் விரும்பிகளுடன் இணைந்து கல்லூரியின் தற்போதய நிலையை உலகிற்கு வெளிப்படுத்தவும், அமெரிக்காவிலுள்ள அறங்காவலர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடாத்தவுள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் வட்டுக்கோட்டையில் கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிர்வாக குழு கூட்டத்தில், தர்மகர்த்தா சபையின் பரிந்துரைகளை நிறைவேற்றும் வகையில் ஆளுநர் சபையின் தலைவர் மற்றும் உப. தலைவர் ஆகியோரை பதவி விலகமாறு வலியுறுத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts