யாழ்பாண தீவுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு ஜனாதிபதி அனுமதி

யாழ் தீபகற்பத்தில் அமையப்பெற்றுள்ள தீவுகளுக்கிடையே பயணிகள் போக்குவரத்தினை சீரான முறையில் நடாத்தும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை கடற்படையினரின் முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிக்காட்டலிற்கமைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதன் அடிப்படையில் யாழ்ப்பாண தீவுகளிற்கருகாமையில் படகுதுறைகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிக்கும் பொருட்டு கடற்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

கரையோர பயணிகள் போக்குவரத்து சேவையானது துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது. பயணிகள் போக்குவரத்தின் பொருட்டு பயன்படுத்தப்படுகின்ற படகுகளின் தரத்தினை பேணுதல், தீவுகளிற்கருகாமையில் படகுதுறைகளை நிர்மாணித்தல், மக்களின் பாதுகாப்பினை உறுதிச்செய்தல் உள்ளடங்கிய அனைத்து காரணிகளும் இச்செயற்றிட்டத்தில் உள்ளடங்கியுள்ளன.

யாழ் தீபகற்பத்தில் அமையப்பெற்றுள்ள 11 தீவுகளுள் குறிக்கட்டுவான், நாகதீபம், நெடுந்தீவு, அனலைதீவு, எலுவைதீவு, புங்குடுதீவு, மற்றும் காரைநகர் ஆகிய 7 தீவுகளில் மாத்திரமே மக்கள் வசிக்கின்றார்கள்.

இவற்றுள் ஒரு சில தீவுகளிற்கிடையே தரைவழி போக்குவரத்து காணப்பட்ட போதிலும் ஏனையவற்றிற்கு கடல் வழி போக்குவரத்தே இன்று வரையில் காணப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் பண்டைய காலம் தொட்டு பயணிகள் படகுகள் மற்றும் படகுதுறைகளில் காணப்படுகின்ற தொழில்நுட்ப கோளாருகள் காரணமாக மிகவும் ஆபத்தான முறையிலேயே பயணிகள் போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டது.

எனவே இந்நிலையினை சீர்செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதன் முதற்படியாக யாழ்பாணம் சுருவில் பகுதியில் படகுகளின் தொழில்நுட்ப தரத்தினை பரிசோதிக்கும் பொருட்டு படகு திருத்தும் நிலையத்தினை நிர்மாணிப்பதற்கும், வணிக கப்பற் செயலகத்தின் உப அலுவலகமொன்றினை ஊர்காவற்றுறையில் திறப்பதற்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுமை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Posts