யாழ்ப்பாணத்தில் Pick Me செயலி ஊடாக கிடைக்கப்பெற்ற வாடிக்கையாளரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது , தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகேயே நேற்றையதினம் இச்சம்வம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் நின்று ஒருவர் “Pick Me ” செயலி ஊடாக முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்தியுள்ளார் எனவும், இதனை அடுத்து அவரை ஏற்றுவதற்காக வந்த முச்சக்கர வண்டி சாரதியிடம் தரிப்பிடத்தில் நிற்கும் சாரதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த பிக்மீ சாரதி மீது ஏனைய சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் Pick Me சேவை அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து ஏனைய முச்சக்கர வண்டி சாரதிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.