யாழில் உள்ள உணவகங்களில் 90 வீதமான உணவகங்கள் உணவகம் ஒன்றுக்கு ஏற்றவகையில் அமைக்கப்படவில்லை என யாழ்.மாநகர சபையின் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ் உணவகங்களில் கழிவகற்றும் பாதை, உணவுப் பொருட்கள் வைக்கும் இடம், சமையலறை, களஞ்சியம் என்பன சீரான முறையில் காணப்படவில்லை அல்லது அமைக்கப்படாமையே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
யாழ்.மாவட்டத்தில் உணவு சம்பந்தமான தொற்றும், தொற்றா நோய்கள் 35 சதவிகிதம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இது நாடளாவிய ரீதியில் அதிகரித்த தொகை எனவும் இதற்குக் காரணம் இங்கு காணப்படுகின்ற உணவுப் பழக்கங்களில் காணப்படுகின்ற சுகாதார மற்ற நிலையே என யாழ். மருத்துவர் சங்கம் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பின்போது சுட்டிக் காட்டியிருந்தது.
இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் வைத்திய அதிகாரிகளிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
எமது உணவுப் பழக்கவழக்கங்களில் சுகாதாரமற்ற நிலை காணப்படுவது உண்மையே. குறிப்பாக இது இங்குள்ள உணவகங்களில் மிக அதிகமாகவே காணப்படுகின்றது.
யாழ். நகரிலுள்ள மருத்துவ அதிகாரி 9 பிரிவுகளில் உள்ள உணவகங்களிலும் இதே நிலை தான் காணப்படுகின்றது.
தண்ணீர் கொண்டுவரும் நிலை, சாப்பாடு பரிமாறும் நிலை போன்ற சிறு விடயங்களில்கூட சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
குறிப்பாக இவ்வுணவகங்கள் யாவும் உணவகங்களாகவே இயங்க முடியாது. ஏனெனில் இவை உணவகங்களுக்கு ஏற்ற வகையிலான கட்டட அமைப்பைக் கொண்டிருக்கவில்லை.உணவு கொண்டு செல்லவும் கழிவகற்றவும் ஒரே வழியினைத் தான் பயன்படுத்துகின்றனர்.
கடைக்கு வருபவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது கழிவுத் தொட்டி நிறைவுற்றதும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அதனூடாக கழிவை எடுத்து செல்கின்றனர். இவ்வாறு பெரும்பாலான உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடனேயே காணப்படுகின்றது.
இச்சுகாதாரமற்ற நிலையினை முழுமையாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களே பொறுப்பேற்க வேண்டும். இதனைப் பொதுமக்களும் தாமாக தட்டிக்கேட்க முன்வர வேண்டும். உணவை வெறுங்கையால் எடுத்துத் தருவது சுத்தமற்ற குடிநீர் போன்றவை தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்.
மேலும் இனி வருங்காலங்களில் ஒவ்வொரு கிழமைகளிலும் யாழில் உள்ள உணவகங்கள் பரிசோதனையிடப்படுவதோடு வருடா வருடம் அனுமதிப்பத்திரம் கட்டாயமாக புதுப்பிக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.