Ad Widget

யாழில் 100 கிலோ கஞ்சா கடத்தல் முறியடிப்பு ; இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு கடத்தி செல்லுவதற்காக கொண்டு வரப்பட்ட 100கிலோ கேரள கஞ்சா விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

kanja

இதன் மூலம் பாரிய கடத்தல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட வளலாய் – அக்கரை கடற்பகுதியில் வைத்தே இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அக்கரை கடற்பகுதியினுடாக 100 கிலோ கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற இருவர், குறித்த பகுதியில் வைத்து வேறொருவருக்கு கைமாற்ற முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில் இக் கடத்தல் சம்பவம் தொடர்பாக விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலைய அடுத்து, கடத்தல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் குறித்த கடற்கரை பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கண்கானிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அதிகாலை நான்கு மணியளவில் குறித்த கடற்கரை பகுதிக்கு இருவர் மேற்படி கேரள கஞ்சா கடத்திவந்திருந்த நிலையில், அதனை அங்குள்ள கடத்தல்காரர்களிடம் கையளிப்பதற்காக காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் விஷேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்த கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மாதகல் பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றைய நபர் வளலாய் பகுதியை சேர்ந்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக விஷேட அதிரடிப்படையின் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் கைதுசெய்யப்பட்ட இரு நபர்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளும் அச்சுவேலி பொலிஸார் ஊடாக நீதீமன்றில் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

Related Posts