சர்வதேச வர்த்தக கண்காட்சி 2016 யாழ்ப்பாணத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி ஜனவரி 31 வரை நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் கே.விக்னேஷ தெரிவித்தார்.
சர்வதேச வர்த்தக கண்காட்சியின் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், யாழ். கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை கண்காட்சி நிறுவனம் மற்றும் இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டிலும், நாளை மறுதினம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ் மாநகர சபை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த வர்த்தக கண்காட்சி 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் 300 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
வவுனியா மற்றும் முல்லைத்தீவு வர்த்தக சம்மேளனங்களைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2016 நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
இப்பிராந்தியத்தில் தற்போது இடம்பெற்று வருகின்ற பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் முன்னர் இல்லாத வகையில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புக்களுக்கு வழிவகுத்துள்ளது.
வாய்ப்புக்கள் மற்றும் முதலீடுகளை ஆராய்வதற்காக 60 அஙகத்தவர்களை உள்ளடக்கிய விசேட தூதுக்குழு ஒன்று இந்தியாவிலிருந்து வருகை தரவுள்ளது.
உலகிலுள்ள பல வலிமைமிக்க வியாபார மற்றும் வாழ்க்கைமுறை நகரங்களுக்கு இணையாக இப்பிராந்தியத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சியின் கீழ் நகரங்கள், தெருக்கள், மின்சாரம், பாலங்கள் மற்றும் ஏனைய முக்கியமான அம்சங்கள் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
மூன்று தினங்களாக இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் நிர்மாணம், விருந்தோம்பல், உணவு, பானவகை மற்றும் பொதியிடல், வாகனம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிதி, ஆடை மற்றும் துணி, விவசாயம், நுகர்வோர் உற்பத்திகள் மற்றும் மேலும் பல தொழிற்துறைகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வானது ´வடக்கிற்கான நுழைவாயில்´ என பெயர் பெற்றுள்ளது.
தெற்கு மற்றும் வடக்கிற்கு இடையில் கூட்டு தொழில் முயற்சிகள், ஒன்றிணைந்த வர்த்தக நடவடிக்கைகள், பாரியளவிலான கேள்விகளை ஏற்றுக்கொள்ளல் என வர்த்தகரீதியாக பிணைப்பை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொது மக்கள் இந்த வர்த்தக கண்காட்சியினை சிறப்பு நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வர்த்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.