யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பத்துடன் தொடர்புடையவர்களெனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், அவர்களை அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.
அத்துடன், கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனுரொக் என்ற இளைஞரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரையும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அந்தவகையில் அண்மை காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக கொக்குவில் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் பிறந்த நாள் கொண்டாடிய 10 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் சிலர் மதுபோதையில் இருந்தனர் என்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.