யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஒரு தொகுதி தங்க ஆபரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
குடாநாட்டின் பல இடங்களிலும் அண்மைய நாட்களில் வழிப்பறிகளும் நகைத் திருட்டுக்களும் இடம்பெற்று வந்தநிலையில் அவை தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த நகைக் கொள்ளைகளுடன் தொடர்புடைய ஒருவரையும் அந் நகைகளை உருக்கிக் கொடுக்கின்ற ஒருவரையும் நேற்று வியாழக்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் மீட்டுள்ளதாகவும் களவாடப்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என சந்தேகிக்கப்படும் சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பதினைந்து பவுண் நகைகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடமும் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை குறித்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதால் அவருக்கு போதைப் பொருளை பெற்றுக் கொள்வதற்கு பணம் தேவைபடுவதாலேயே இவ்வாறு நகைக் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாக தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.