யாழில் மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 38 பேர் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 27 குழு மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், மோதல்களில் ஈடுபட்ட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, அண்மைக்காலங்களில் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘அண்மையில் எனது ஆளுமைக்கி கீழ் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் அதிகமாக 10 சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிலும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 9 சம்பவங்களும் இடம்பெற்றன.

அத்துடன், வெளிப்பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களுடன் சேர்த்து 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 38 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் ஆவா குழுவைச் சாராத குழு மோதல்களில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள அஜித் குழுவினைச் சேர்ந்தவர்களில் 5 குற்றச் சம்பவங்கள் நிலுவையில் இருக்கின்றன’ என தெரிவித்துள்ளார்.

Related Posts