யாழில் முழு அடைப்பு, கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும், முழுஅடைப்பிற்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது.

இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டியும் திங்களன்று ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வினை முன்னிறுத்தி இடம்பெறவுள்ள இந்த போராட்டத்திற்கு அனைவரது ஆதரவும் அவசியம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் “இலங்கைத்தீவில் காலாதிகாலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டே வந்துள்ளன. அத்தகைய தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகளுள் ஒன்றாகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும் காணப்படுகின்றது.

உள்ளக விசாரணைப் பொறிமுறையினையும் உள்ளக கலப்பு விசாரணைப் பொறிமுறையையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் தொடர்ந்தும் ஜெனிவா மனித உரிமைகள் சபையினால் மேற்படி நடவடிக்கைகளிற்கு கால அவகாசம் வழங்கப்படுவதனையும் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளது.

போரின் போது சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியது தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தொடர்ந்தும் தவறுவதனால் அந்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையின் கீழ் அதனை நிறைவேற்ற வேண்டிய அவசியம் எழுவதை ஐ.நா. மனித உரிமைகள் சபை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகளிற்கான நியாயமான தீர்வினை சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினூடாகவே சாத்தியமாக்க முடியும். ஐ.நா. பாதுகாப்புச் சபை ஊடாக இலங்கை விவகாரம் கையாளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts