இம்முறை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் யாழ் மக்கள் எந்தவித அச்சுறுத்தலோ சந்தேகமோ இன்றி தமக்கு விருப்பமான பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இவ்வாறு கூறியுள்ளார்.
2008ம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில், இடம்பெற்ற தேர்தல்களின் போது, பாதுகாப்பு படையினர், அந்தந்த படைப் பிரிவின் வளங்கள், சிவில் உடை தரித்த இராணுவ வீரர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் தொடர்புபட்டதால், வாக்காளர்கள் மத்தியில் அச்சத்துடனான சூழ்நிலை நிலவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலக்கத் தகடு இல்லாத வாகனங்கள், கராஜ் இலக்கங்கள் பொரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் இனந்தெரியாத குழுவினர் வடக்கிற்கு சென்று தேர்தல் நடவடிக்கைகளில் தொடர்புட்டதால் அந்த பயம் மேலும் அதிகரித்ததாகவும் கீர்த்தி தென்னக்கோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இம்முறை அவ்வாறான அச்சநிலைமையை எந்தவொரு கட்சியோ குழுவினரோ தோற்றுவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தற்போது வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய பகுதிகளில் தேர்தல் சட்டங்களை பாதுகாக்கும் செயற்பாடுகளைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறினார்.