யாழில் முதியவர்கள் மீது தாக்குதல்: நகைகள் கொள்ளை!

யாழ்ப்பாணம், அராலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 71 வயதுடைய பெண்ணும் 80 வயதுடைய ஆணும் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை- அராலி செட்டியார் மடம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்குள் உட்புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த வயோதிப தம்பதிகளை மிரட்டி நகைகளை கேட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் மறுக்கவே, அவர்களை வாளால் காயப்படுத்தி நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே அயலவரின் உதவியை வீட்டு உரிமையாளர் கோரி காயமடைந்தவர்கள் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கொள்ளையிடப்பட்ட வீட்டுக்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts