யாழில் முச்சக்கரவண்டியில் சாகசம் புரிந்து, வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது!

யாழ். நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் புரிந்து, வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அரியாலை மற்றும் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த மூவர் யாழ். பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டனர்.

யாழ் நகரில் புத்தாண்டுக்காக செவ்வாய்க்கிழமை (31) இரவு வேளை ஒன்றுகூடிய இளைஞர்கள் குழுவினர் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டியதுடன் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் ஏற்பட்டதையடுத்து, குறித்த காணொளியை அடிப்படையாக கொண்டு யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணையின் போது அடையாளம் காணப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாகியுள்ள நிலையில், குறித்த நபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts