யாழில் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

யாழ் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மீள்குடியேற்றப்பட வேண்டிய இடங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், நேற்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேனா ஹெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்றது.

யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மீள்குடியேற்றப்பட வேண்டிய இடங்கள் தொடர்பில், இதில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மிக முக்கியமாக, அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக, இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான புள்ளி விபரங்கள், இடம்பெயர்ந்த முகாம்களில் இருப்பவர்கள் தொடர்பான விபரங்கள் போன்றவற்றை எடுப்பதற்கான கூட்டமாக இது அமைந்தது என, இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

எமது மாவட்டத்தின் ஒவ்வொரு பிரிவு ரீதியாகவும் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான விபரம், முகாம்களில் இருப்பவர்கள் தொடர்பான விபரங்களையும் நாம் இதன்போது வழங்கியுள்ளோம் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் குழுக்களை அமைத்து மிகதுள்ளியமாக இந்த தகவல்களை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை முடிந்ததும் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் ஒரு அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts