தேசிய மீனவ ஒத்துழைப்பின் இயக்கத்தின் ஏற்பாட்டில் காணி சுவீகரிப்பு , மீள்குடியேற்றம், காணாமல் போனோர் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 15ஆம் திகதி யாழ். பேரூந்து நிலையத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
போராட்டம் தொடர்பில் தேசிய மீனவர் இயக்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் இருந்தும் மக்கள் கலந்து கொள்கின்றனர்.
அரசியல் கட்சிகள் , அரசியல் பிரமுகர்கள் மக்கள் அமைப்புக்கள் , மதபுருமார், பெண்கள் அமைப்புக்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ள குறித்த போராட்டத்தில்
இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் குடியேற்ற வேண்டும்.
அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் காணிக் கொள்ளையை நிறுத்த வேண்டும்.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும்.
வடக்கு கிழக்கில் சிவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
மண்ணெண்ணை விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் மானியம் கிடைப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் மதம் மற்றும் இன ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காணாமல் போனவர்கள் தொடர்பான இழுத்தடிப்புக்களை விடுத்து உடன்பதில் வழங்க வேண்டும்.
சாத்வீகப் போராட்டங்கள் நிகழும் போது இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுதுறையினர் இடையூறு செய்வதை உடன் நிறுத்த வேண்டும்.
போரின் போது சரணடைந்தவர்களை மீள ஒப்படைக்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட கைதிகளை உடன்விடுதலை செய்ய வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சி பேதங்கள் பாராது அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.