யாழில் மாபெரும் எழுச்சிப் பேரணி

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ம் திகதி யாழில் மாபெரும் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது என, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த சின்னங்களை அமைப்பதனை எதிர்த்து இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது மக்கள், பல்கலைக்கழகத்தினர் சமூகவியலாளர்கள் ஒன்றிணைந்து இராணுவ மயமாக்கல் மற்றும் பௌத்தமத சின்னங்கள் அமைப்பது தொடர்பாக, யாழ். பொதுநூலகத்தில் கலந்துரையாடினார்கள்.

இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படாது, மக்களின் காணிகளை இராணுவத்தினர் கபலீகரம் செய்து வருகின்றார்கள். அதனைக் கண்டித்தும் மாபெரும் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகம் ஒன்றினை அமைப்பதாக கூறியிருந்தாலும், காணாமல் போனவர்கள் பற்றி முழுமையான பதில் எதுவும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை.

ஆனால், காணாமல் போனவர்கள் பற்றி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேட்ட போது, இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டுமென நல்லிணக்க ஒருங்கிணைப்பின் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க கூறியிருக்கின்றார்.

இப்போது பதில் கூறிவிட்டால் யுத்தக் குற்றம் ஆகிவிடும் என்பதற்காகவும், குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாத நிலைமையும் அலுவலகத்திற்கு இருப்பதனாலும், இவ்வாறு கூறப்படுகின்றது.

ஐ.நாவின் தீர்மானத்திற்கு ஏற்ப இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிபதிகளையும் ஏற்றுக்கொள்ளாது, என்றும் கூறியிருக்கின்றது.

எனவே, இவ்வாறான விடயங்களைக் கண்டித்தும், அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

இந்த அரசாங்கமும், முன்னைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலைக்கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரல்களை நிறுத்த வேண்டுமென்றும், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை வெளிப்படுத்த தீர்மானித்துள்ளனர் எனக் கூறினார்.

அத்துடன் குறித்த போராட்டத்தினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிளிநொச்சியில் முன்னெடுக்கவுள்ளதாகவும், இவ்வாறு தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Related Posts