அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்தறியும் அமர்வு இன்று (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது.
புதிய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றினை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் குழு நியமிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக யாழ் மாவட்டத்திற்கான மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இருதினங்கள் இடம்பெறவுள்ளன.
இன்று (15) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு இக்கருத்தறியும் அமர்வு ஆரம்பமாகி மாலை 4.30 மணிவரை இடம்பெறவுள்ளது.
இதே போன்று நாளை (16) குறித்த அமர்வு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே யாழ் மாவட்டத்திற்குட்பட்ட கருத்துக்களை பதிவுசெய்ய விரும்பும் பொதுமக்கள் இவ் அமர்வுகளில் கலந்து கொண்டு வாய்மொழி மூலம் தமது கருத்துக்களை பதிவு செய்யலாம் என்றும் விரும்பும் பட்சத்தில் எழுத்துமூல பிரதிகளும் கையளிக்கலாம் என்றும் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.