யாழ்ப்பாண மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (19) யாழ். மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், ஏற்கனவே கிராம ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 70 புலம்பெயர் தொழிலாளர் சங்கங்கள் காணப்படுவதாகவும், அதன் வெளிப்பாடாக மாவட்ட மட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் நடைபெறுவதாகவும் தெரிவித்தாா்.
மேலும் அவர், தற்போது வெளிநாடுகளுக்குச் செல்வோா் அதிகமாக காணப்படுவதாகவும் உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தல் குறைவாகவே உள்ளதெனவும் இதன் நோக்கத்தை சரியான முறையில் அடையாளப்படுத்தி நலன்சாா் விடயங்களை செயற்படுத்துவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை, புதிதாக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தாா்.
இந்த கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோத்தர், பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்தவர்கள், வெளிநாடு செல்லவிருப்போர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.