இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளில் 650 பேர் அங்கவீனர்களாக உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் சுமார் மூவாயிரம் பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 650 பேர் அங்கவீனமுள்ளவர்களாக உள்ளனர் என புனர்வாழ்வு பொதுநல வேலைத்திட்ட யாழ். காரியாலய அதிகாரி மேஜர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.இவர்கள் யுத்தத்தின் போது கண், கை மற்றும் உடலில் ஒவ்வொரு அவயவங்கள் இழந்தவர்களாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் சரணடைந்த முன்னாள் போராளிகளில் சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களில் அங்கவீனர்களுக்கு வீட்டுக்கடனுதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக புனர்வாழ்வு அமைச்சின் ஆணையாளர் நாயகம் மற்றும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அவர் கூறினார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு வேலைத்திட்ட அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்க முடியுமென்றும், அவ்விண்ணப்ப படிவத்தினை சமூக சேவைகள் அமைச்சின் மூலம் பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தலில் விண்ணப்பங்கள் நிரப்பபட்டு புனர்வாழ்வு அமைச்சிற்கு அனுப்பும் பட்சத்தில் இரண்டரை இலட்சம் ரூபா, வீடு நிர்மாணிப்பதற்கும், வீட்டு திருத்த பணிகளுக்கான 1 1/2 லட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.