யாழில் பிரபல பெண் அரசியல்வாதியின் செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவரும், பிரபல பெண் அரசியல்வாதி ஒருவரின் செயலாளரும் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அரசியல்வாதியின் செயலாளர் இன்று கைதாகியுள்ளார்.

சுவிஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 7 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் பதிவுசெய்த முறைப்பாட்டை தொடர்ந்தே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும், குறித்த வட்டுக்கோட்டை நபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, பணம் அறவிட்டுள்ளனர்.

ஆனால், பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டதை தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் இருவரும், வட்டுக்கோட்டை நபருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் தொடர்புகொண்ட தொலைபேசி இலக்கத்தை வழங்கி யாழ். பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக கடந்த 9ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொலைப்பேசி இலக்கத்தை கொண்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், குறித்த தொலைபேசி இலக்கம் யாழிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளரது என கண்டுபிடித்துள்ளனர்.

அதற்கமைய ஊடகவியலாளர் நேற்று கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பெண் அரசியல்வாதி ஒருவரின் செயலாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். விசாரணையின் பின்னர் சந்தேகநபர்களை யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Posts