பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த அவரது செயலாளர்களில் ஒருவரின் அலைபேசி திருட்டுப் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற போதே அவரின் கைப்பையிலிருந்த அலைபேசி திருடப்பட்டுள்ளது.
55 ஆயிரம் ரூபா பெறுமதியான அதிதிறன் அலைபேசி (ஸ்மார்ட் மொபைல்) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிகழ்வில் பங்கேற்றிருந்த போது எனது கைப்பைக்குள்ளிலிருந்து திருடப்பட்டுள்ளது என்று பிரதமரின் செயலாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் செயலாளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முதல் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
முறைப்பாட்டாளரின் அலைபேசி இணைப்பை வழங்கும் நிறுவனமான மொபிட்டலிடமிருந்து அலைபேசி திருடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட இடம்தொடர்பான விவரங்களைக் கோருவதற்கு கட்டளை வழங்குமாறு அந்த அறிக்கையை பொலிஸார் தாக்கல் செய்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பதை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், பொலிஸாரால் கோரப்படும் தகவல்களை வழங்குமாறு மொபிட்டல் நிறுவனத்துக்கு கட்டளையிட்டார்.