யாழில் பாடசாலை அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை – கல்வி அமைச்சு

யாழிலுள்ள பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதற்கு பணம் கோரினார்கள் எனும் குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்கள் என நேற்றைய தினம் மாலை இணையத்தளங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.

இந்நிலையில், இந்த விடயத்தை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் மறுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த அதிகாரி தெரிவிக்கையில், “யாழில். உள்ள பிரபல பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதற்கு அதிபர்கள் பணம் கோரினர் என பெற்றோரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அதில் காணொளி ஆதாரங்களுடனும் முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளன.

அவற்றின் அடிப்படையில் பாடசாலை அதிபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய தினமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

குறித்த குற்றசாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதால், அவை குறித்த மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியாதுள்ளது. அவை விசாரணைகளை பாதிக்கும்” என மேலும் தெரிவித்தார்.

Related Posts