யாழ். மாவட்டத்தில் இன்புளுவென்சா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகியவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரையில் 113பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணியொருவர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜா, வியாழக்கிழமை (02) தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பணிப்பாளர், ‘இந்த வைரஸ் தாக்கம் தொடர்பில் மே மாதத்தில் 16 குழந்தைகள், 21 வயது வந்தவர்கள் மற்றும் 11 கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனி மாதத்தில் 19 குழந்தைகள், 31 வயது வந்தவர்கள், 15 மற்றும் 15 கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டனர்’ என்றார்.
‘113பேருக்கு இன்புளுவென்சா வைரஸ் தாக்கத்துக்கு எதிரான மருந்துகள் கொடுக்கப்பட்டன. இறந்த கர்ப்பிணியின் இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தொடர்பில் கர்ப்பிணிகள் அதிகம் அக்கறை செலுத்த வேண்டும். தடிமன் காணப்பட்டால் இது தொடர்பில் சிகிச்சை பெறவேண்டும்.
சிறுகுழந்தைகளையும் கவனிக்க வேண்டும். மேலும், கிட்னி, லிவர் உள்ளிட்ட நீண்டகால நோய் பாதிப்பு உள்ளானவர்களுக்கும் இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தகுந்த சிகிச்சை பெறவேண்டும்.
அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரின் ஆலோசனைகள் பெறவேண்டும். இது தொடர்பில் சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இரத்த மாதிரிகளை கொழும்புக்கு அனுப்பி பரிசோதனை செய்வதற்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’ என்று அவர் மேலும் கூறினார்.