கொக்குவில் கிழக்கு மற்றும் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறான சம்பவங்களில் இரண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குறித்த நபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவில் வல்வெட்டித்துறையில் 12 வயதுச் சிறுமி ஒருவரைக் காதலித்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 27வயது இளைஞர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருப்பதாக யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெப்றி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதனை அடுத்து அவரை எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத் தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வாரம் யாழ். பொலிஸாருக்கு கிடைத்த மற்றுமொரு முறைப்பாட்டில் நான்கு வயதுச் சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 68 வயது முதியவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு யாழ். நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் கடந்த 7ம் திகதி கொக்குவில் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு மாலை நேர வகுப்பிற்குச் செல்லும் நான்கு வயது மாணவி ஒருவர் சென்ற சமயம் அங்கு வகுப்பு நடைபெறவில்லை. அதனை சாதகமாகப் பயன்படுத்திய குறித்த வீட்டுக்காரனான 68 வயதுடைய வயோதிபர் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
இதனை அடுத்து இந்தச் சம்பவம் குறித்து அயலில் உள்ளவர்கள் சிறுவர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதனை அடுத்து பொலிஸாருக்கு கடந்த 18ம் திகதி இது குறித்து முறைப்பாடு கிடைத்ததனை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு யாழ். நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் யூலை மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வயோதிபரின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவர் அவரது மனைவியுடன் குறித்த வீட்டில் வசித்து வந்திருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
எனவே, இவ்வாறு சிறுபிள்ளைகளை கல்வி கற்க அனுமதிக்கும் பெற்றோர் இவ்வாறான பாதிப்புக்கள் பிள்ளைகளுக்கு ஏற்படா வண்ணம் அவதானமாக செயற்பட வேண்டும். என்றும் பொலிஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஆறுமாதங்களில் பதினொரு சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், தெரிவித்த யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் 16 வயதிற்கும் குறைவான வயதுடைய சிறுமிகளே இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.