யாழில் படை முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 23 காணிகளை விடுவிக்கப் படைத்தரப்பு இணக்கம்

யாழ்.மாவட்டத்தில் படையினரால் கையகப்படுத்தப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 23 பேருக்குச் சொந்தமான காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு படைத்தரப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி, நல்லூர், கோப்பாய், தெல்லிப்பளை, மருதங்கேணி, பருத்தித்துறை, கரவெட்டி, உடுவில், யாழ்ப்பாணம், சங்கானை ஆகிய 10 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 29 கிராமசேவர் பிரிவுகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் இராணுவம், கடற்படையினர் மற்றும் பொலிஸார் நீண்டகாலம் தங்கியிருந்த நிலையில் குறித்த காணிகளை தமது தேவைகளுக்காக சுவீகரித்தும் வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் குறித்த காணிகள் தமக்கு தேவையில்லை என படையினர் மாவட்டச் செயலகம் மற்றம் காணி ஆணையாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியிருப்பதாக மாவட்டச்செயலக தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Related Posts