யாழ். பிரதேச சபைகளில் பணிபுரியும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் நான்கு பேருக்கு வட மாகாண ஆளுநரினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இந்த நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டன.
வலி கிழக்குப் பிரதேச சபைச் செயலாளராகக் கடமையாற்றி வந்த திருமதி எஸ்.ஜெயந்தா வட மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் மீண்டும் வலி. தென்மேற்குப் பிரதேச சபைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை வலி. தென்மேற்குப் பிரதேச சபைச் செயலாளராகக் கடமையாற்றிய திருமதி கே.கேதீஸ்வரி காரைநகர்ப் பிரதேச சபைக்கும் காரைநகர்ப் பிரதேச சபையில் இருந்த கே.கனகதுரை வடமராட்சி தென். மேற்குப் பிரதேச சபைக்கும் வடமராட்சி தென்மேற்குப் பிரதேச சபையில் இருந்த திருமதி அன்னலிங்கம் நல்லூர்ப் பிரதேச சபைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நல்லூர்ப் பிரதேச சபையில் இருந்த எஸ்.சாந்தசீலன் உள்ளூராட்சி திணைக்களத்திற்கு நிர்வாக உத்தியோகத்தராகவும் மாற்றப்பட்டிருக்கின்றார்.
இந்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமி மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.தெய்வேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.